காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 17.05.1931 

Rate this item
(0 votes)

சகோதரர்களே! 

நமது ஊருக்கு வந்த விருந்தாளியை வரவேற்கவும், அவருக்கு நமது மரியாதையைக் காட்டிக்கொள்ளவும் என்று நமது ஊர் மக்களின் பிரதிநிதி ஸ்தாபனமாகிய முனிசிபல் சபை திரு. சென்குப்தா அவர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரமளிக்கத் தீர்மானித்து, அவ்வரவேற்பளிக்கும் கூட்டத்திற்கு என்னை தலைமை வகிக்க வேண்டுமென்று நமது முனிசிபல் சேர் மென் திரு ஷேக் தாவுத் சாயபு அவர்கள் விரும்பியபடியும், உங்கள் எல்லோருடைய ஆமோதிப்புப் படியும் எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பெருமைக்கு நன்றி செலுத்துகின்றேன், 

திரு. சென்குப்தா அவர்கள் முதலில் முனிசிபல் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசியபின் இந்த முனிசிபாலிட்டிக்கு மின்சார சப்ளை பொறுப்பை ஒருவெள்ளைக்காரக் கம்பெனிக்கு அரசாங்கத்தார் கொடுத்து விட்டதைக் கண்டித்துப் பேசினார். அது மிகவும் சரியானதேயாகும். ஆனாலும், அக்குற்றம் முழுவதும் அரசாங்கத்தாருடையதல்ல, அவர்களுக்கு நம்மிடம் இவ்வளவு அலட்சியம் ஏற்படுவதற்கு நமது கேவல நிலைமையே காரணமாகும். 

நமக்கு உண்மையில் அரசாங்கத்தார் செய்தது தப்பு என்றும் அவர்கள் நம்மை அலட்சியம் செய்தது நமக்கு அவமானம் என்றும் நம் எல்லோருக்கும் தோன்றுமானாலும் நாம் இப்போதே ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது, நமது முனிசிபல் சங்கத்தின் மூலம் வினி யோகிக்கப்பட அனுமதி கொடுத்தால் ஒழிய நாம் மின்சாரத்தை உபயோகித் துக் கொள்ளுவதில்லை என்கின்றதான ஒரு உறுதி நமக்கு இருக்க வேண்டும். அப்படியானால் தான் நமது காரியம் வெற்றி பெறும். நமது சுயமரியாதையும் காக்கப்படும். அப்படிக்கில்லாமல் சர்க்காராரை ஒருவர் வைது பேசவும் மற்றொருவர் கைதட்டவுமான காரியத்தால் ஒரு காரியமும் நடந்துவிடாது. 

நிற்க, அரசியல் இயக்க சம்பந்தமாக திரு. சென்குப்தா அவர்கள் அநேக விஷயம் உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அக்கிராசனர் என்கின்ற முறையில் உபன்யாசகர் பேசிய விஷயத்தை ஒட்டியும், அதைப் புகழ்ந்தும் பேசுவதுதான் எனது தர்மமாகுமே யொழிய அவற்றுள் அபிப்பிராயப் பேதப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டு அக்கிராசனர் தான் மாறு பட்ட அபிப்பிராயத்தைத் தெரிவிக்கு முறையில் எதையும் பேசுவது தர்மமாகாது. 

ஆகவே நான் அவர்கள் பேசிய விஷயங்களில் நான் மனப் பூர்வமாய் ஆமோதிக்கும் விஷயங்களை எடுத்துப் பேசிப்பாராட்டுவதன் மூலம் எனது கடமையைச் செலுத்துகிறேன். 

வெள்ளைக்கார ஆட்சியில், வியாபார முறையில் நமக்கு உள்ள கெடுதிகள் முழுவதும் திரு.சென்குப்தா அவர்கள் எடுத்துக்காட்டியது உண்மையோயாகும். அந்தப்படி வெள்ளைக்காரர்கள் தைரியமாய்ச் செய்ய நாம் விட்டுக் கொண்டே வந்துவிட்டோம். இப்போதும் அதைத் தடுக்க வேண்டுமானால் அவர்கள் இந்த நாட்டில் வியாபார ஆட்சி செய்யத் துடங் கின காலத்தில் நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு சௌகரியம் செய்து கொடுத்தோமோ, அதையே இனியும் செய்து கொண்டிருந்தால் முடியாது. அவர்களது வியாபார ஆட்சிக்கு இங்கு அவர்களுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கும் தன்மைகளை ஒழிக்க வேன்டும். அதை திரு.சென்குப்தா அவர்கள் தனது பிந்திய பாகத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் இங்குள்ள பலருக்கு அவரின் முந்தியபாக உபன்யாசம் மிக சந்தோஷமாய் இருந்தது..அநேகர் கைத்தட்டினார்கள். தலை ஆட்டியும், குலுங்கிக் குலுங்கி யும் சிரித்தார்கள். ஏனென்றால் அவையெல்லாம் வெள்ளைக் காரர்களை வைதவைகளேயாகும். 

ஆனால் அவர் உபன்யாசத்தின் பிந்திய பாகம் அநேகருக்கு மிக்க சங்கடமாக இருந்ததை நான் பார்த்தேன் முகத்தைச் சுண்டவைத்துக் கொண்டார்கள். தங்கள் அதிருப்தியையும் சிலர் காட்டினார்கள் திரு. சென்குப்தா அவர்களும் இந்த நாட்டில் தீண்டாமை கொடுமை என் புத்தியை கலைத்து விட்டது" என்றும், கோபியில் ஒரு பார்ப்பான் தைரியமாய் என்னை எதிர்க்க வந்துவிட்டான். நீங்கள் எப்படி இவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்றும் என்னைக் கேட்டார். நான் நீங்களே நேரில் பார்க்க நேர்ந்தது சந்தோஷம் என்று சொன்னேன். 

"காங்கிரஸ் காங்கிரஸ்" “காந்தி காந்தி” என்பதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. 

காங்கிரசைப்பற்றி இங்கு எவ்வளவு பெருமைப்படுத்தி கூறிக் கொண்டாலும் அதற்கு திரு.சென்குப்தா சொன்னபடியான கொள்கையை யுடைய மெம்பர் லக்ஷம் ஜனங்களில் ஒருவர் கூட இல்லை என்றுதான் நான் சொல்லுவேன் இன்று காங்கிரசில் மெம்பர்களாய் இருக்கும் ஜனங்களால் ஒரு காரியமும் முடிந்துவிடாது என்பது எனது உறுதி. பஞ்சகச்சமும், பட்டை நாமமும், உச்சிக் குடுமியும் வைத்துக்கொண்டு, என்னைத் தொடாதே எட்டி நில்" என்று சொல்லுபவர்கள் தக்களியை கையில் சுற்றிக்கொண்டு 4 அணா கொடுத்து காங்கிரஸ் மெம்பராகி மகாத்மா காந்திக்கு ஜே" காங்கிரசுக்கு ஜே' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருப்பவர்கள், 100பேர்களால் ஆகும் வேலையைவிட மக்களில் தீண்டாமை என்பதே கிடையாது இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் சகோதரர்கள், சோம்டோரி வாழ்க்கையை ஒழிக்க வேண்டும்' என்று உண்மையாய் கருதிக் கொண்டு கதர் கட்டாமல் "காந்தி ஒழிக "காங்கிரஸ் ஒழிக' என்று சொல்லுகின்ற வனாயிருந்தாலும் அவனே நாட்டுக்கு நன்மைச் செய்கின்றவனாவான். பிந்தியவனது முயற்சியினால் தானாகவே அன்னியநாட்டு வியாபார ஆக்ஷி ஒழிந்துபோகும் என்பது எனது நம்பிக்கை. 

இந்த தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் காங்கிரசு மெம்பர்களை விட காங்கிரஸ் மெம்பர் அல்லாதவர்களிலேயே அதிகமான ஜனங்கள் காரியத்தில் நடந்து காட்டுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

போலி மெம்பர்களைக் கொண்ட எந்த ஸ்தாபனமும் எவ்வளவு செல்வாக்கு உள்ளதாக இருந்தாலும் அதனால் ஒரு பயனுமே விளையாது. 

தீண்டாமையை அனுஷ்டிப்பது காட்டுமிராண்டித்தனம் என்று திரு.சென்குப்தா சொன்னார். இப்போது காங்கிரசிலிருப்பவர்களில் காட்டு மிராண்டிகளல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். 

வெள்ளைக்காரர்கள் ஆக்ஷி சில விஷயங்களில் விஷக்கிருமிகளின் தொல்லைகள் போலத்தான் இருக்கின்றது என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். 

ஆனால் விஷக்கிருமிகள் ஏற்படாதபடி நம் நாட்டை சுத்தமாக வைத் திருக்கவேண்டாமா என்று கேட்கின்றேன். 

சிறிதும் குப்பை கூளமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பை கூடளம் மலிந்து கெட்டகாற்று ஏற்பட்டால் அதிலிருந்து விஷக்கிருமிகள் உண்டாகித்தான் தீரும். அதன் ஆதாரத்தை கவனியாமல் விஷகிருமி கடித்ததற்கு மாத்திரம் அவ்வப்போது மருந்து போட்டுக் கொண்டிருந்தால் கிருமி உபத்திரவம் ஒரு நாளும் நீங்காது. அது உண்டாவதற்கு ஆதாரமான குப்பை கூளங்களை அடியோடு அப்புறப்படுத்த வேண்டும் அதுபோலவே நமது நாட்டிற்கு அன்னிய ஆட்சி ஏற்பட வேண்டிய காரணம் என்ன? என்பதை கவனியுங்கள். அதை யார் கொண்டுவந்து விட்டார்கள் என்பதை நினைப்பூட்டிப் பாருங்கள். அந்தக் காரணத்தை ஒழியுங்கள். அக்காரணம் தீண்டாமை, ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசமேயாகும். அதை கவனிக்காமல் காந்திக்கு ஜே வந்தே மாதரம் என்றால் மந்திரத்தில் மாங்காய் விழுமா? அன்னியரை ஏமாற்ற நினைத்து நாமே ஏமாந்து போகத்தான் இவைகள் உதவும். உண்மையிலேயே நாம் வெள்ளைக்கார கொடுமையைவிட நமது நாட்டு மக்களில் சிலருடைய கொடுமையாலேயேதான் அதிக கஷ்டப்படு கின்றோம். அன்றியும் இந்த மக்களாலேயேதான் வெள்ளைக்காரர்கள் மேலும் மேலும் கொடுமை செய்ய இடமேற்படுகிறது. 

ஆகவே, சகோதரர்களே! நமது பெரியார் திரு.சென்குப்தா அவர்கள் சொன்ன விஷயங்களை நீங்கள் நன்றாய் கவனித்து ஒவ்வொன்றையும் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து தள்ளுவதைத் தள்ளி கொள்ளுவதைக் கொண்டு சரியென்று பட்ட வழியில் நடவுங்கள். 

குறிப்பு : ஈரோடு மகாஜன ஹைஸ்கூடல் மண்டபத்தில் 12.05.1931 அன்று நடை பெற்ற கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 17.05.1931

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.